பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Showing posts with label 06. அமைச்சியல். Show all posts
Showing posts with label 06. அமைச்சியல். Show all posts

அவையஞ்சாமை

பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: அவையஞ்சாமை.

குறள் 721:

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

மணக்குடவர் உரை:
தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர். இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.

பரிமேலழகர் உரை:
வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.).

மு. வரதராசன் உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

மு. கருணாநிதி உரை:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

Translation:
Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse.

Explanation:
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.

குறள் 722:

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

மணக்குடவர் உரை:
கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார். இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:
கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

மு. கருணாநிதி உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை:
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.

Translation:
Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.

Explanation:
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.

குறள் 723:

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

மணக்குடவர் உரை:
பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர். இஃது அவையஞ்சாமை அரிதென்றது.

பரிமேலழகர் உரை:
பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.

மு. கருணாநிதி உரை:
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

Translation:
Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.

Explanation:
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

குறள் 724:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

மணக்குடவர் உரை:
தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லித் தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.

பரிமேலழகர் உரை:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லிச் - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க. (எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அவனது ஒருசார்பயன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.

Translation:
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.

Explanation:
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).

குறள் 725:

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

மணக்குடவர் உரை:
அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.

பரிமேலழகர் உரை:
ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

Translation:
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.

Explanation:
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

குறள் 726:

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

மணக்குடவர் உரை:
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.

பரிமேலழகர் உரை:
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?

மு. கருணாநிதி உரை:
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?

Translation:
To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?

Explanation:
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?

குறள் 727:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

மணக்குடவர் உரை:
பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.

பரிமேலழகர் உரை:
பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல். (பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.).

மு. வரதராசன் உரை:
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.

மு. கருணாநிதி உரை:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

Translation:
As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears.

Explanation:
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

குறள் 728:

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

மணக்குடவர் உரை:
பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார். இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது

பரிமேலழகர் உரை:
நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.).

மு. வரதராசன் உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

மு. கருணாநிதி உரை:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

Translation:
Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.

Explanation:
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.

குறள் 729:

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

மணக்குடவர் உரை:
கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்; உலகநூல் கற்றறிந்துவைத்தும் நல்லாரிருந்த அவையின்கண் சொல்லுதலஞ்சுவார். இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது.

பரிமேலழகர் உரை:
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர். (அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

மு. கருணாநிதி உரை:
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.

Translation:
Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take.

Explanation:
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.

குறள் 730:

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

மணக்குடவர் உரை:
உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.

பரிமேலழகர் உரை:
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர். (ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

மு. கருணாநிதி உரை:
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

Translation:
Who what they've learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.

Explanation:
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

அவையறிதல்

பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: அவையறிதல்.

குறள் 711:

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

மணக்குடவர் உரை:
இருந்த அவை யறிந்தாரை யறிந்து அதற்குத்தக்க சொல்லின் திறத்தை ஆராய்ந்து சொல்லுக: சொல்லின் தொகுதியை அறிந்த தூய்மையையுடையவர். தொகையறிதல்- திறனறிதல். இது அவையறிந்து சொல்லல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் குழுவினை அறிந்த தூய்மையினையுடையார்; அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - தாமொன்று சொல்லுங்கால் அப்பொழுதை அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. (சொல்லின் குழுவெனவே, செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்னும் மூவகைச் சொல்லும் அடங்கின. தூய்மை: அவற்றுள் தமக்காகாதன ஒழித்து ஆவன கோடல். அவை என்றது ஈண்டு அதன் அளவை. அது மிகுதி, ஒப்பு, தாழ்வு என மூவகைத்து. அறிதல். தம்மொடு தூக்கி அறிதல். ஆராய்தல்: இவ்வவைக்கண் சொல்லும் காரியம் இது, சொல்லுமாறு இது, சொன்னால் அதன் முடிவு இது என்று, இவை உள்ளிட்டன ஆராய்தல்.).

மு. வரதராசன் உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.

Translation:
Men pure in heart, who know of words the varied force,
Should to their audience known adapt their well-arranged discourse.

Explanation:
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

குறள் 712:

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

மணக்குடவர் உரை:
சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து நன்மையாமவற்றை யறிந்து சொல்லுக: சொல்லினது வழக்காராய்ந்த நன்மையுடையார். இஃது ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை:
சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையினையுடையார்; இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அதன் செவ்வியை ஆராய்ந்து அறிந்து வழுப்படாமல் மிகவும் தெளிந்து சொல்லுக. (சொற்களின் நடையாவது: அம்மூவகைச் சொல்லும் செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்னும் பொருள்களைப் பயக்குமாறு. செவ்வி: கேட்டற்கண் விருப்புடைமை. வழு: சொல் வழுவும் பொருள் வழுவும். (இவை இரண்டு பாட்டானும் ஒன்று சொல்லுங்கால் அவையறிந்தே சொல்ல வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.

Translation:
Good men to whom the arts of eloquence are known,
Should seek occasion meet, and say what well they've made their own.

Explanation:
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).

குறள் 713:

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

மணக்குடவர் உரை:
அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.

பரிமேலழகர் உரை:
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை. (அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே; அவர் சொல்லவல்லதும் இல்லை.

மு. கருணாநிதி உரை:
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

Translation:
Unversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak.

Explanation:
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

குறள் 714:

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

மணக்குடவர் உரை:
ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.

பரிமேலழகர் உரை:
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க. ('ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.).

மு. வரதராசன் உரை:
அறிவிற் சிறந்தவரின்முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேச வேண்டும்; அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம்போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

Translation:
Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!.

Explanation:
Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

குறள் 715:

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

மணக்குடவர் உரை:
நன்றென்று சொல்லப்பட்ட எல்லாவற்றுள்ளும் மிக நன்று, தம்மின் முதிர்ந்தார்முன் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். முதுவர்- தவத்தாலும் குலத்தாலும் கல்வியாலும் பிற யாதாலும் முதிர்ந்தார். இஃது இருந்த அவையின்கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது.

பரிமேலழகர் உரை:
நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். (தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார். முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது.

மு. கருணாநிதி உரை:
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

Translation:
Midst all good things the best is modest grace,
That speaks not first before the elders' face.

Explanation:
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

குறள் 716:

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

மணக்குடவர் உரை:
ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

மு. கருணாநிதி உரை:
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

Translation:
As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.

Explanation:
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

குறள் 717:

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

மணக்குடவர் உரை:
நூல்களைக்கற்று அதன்பயனும் அறிந்துள்ளாரது கல்வி விளங்காநிற்கும்; குற்றமறச் சொற்களைச் சொல்லவல்லார் முன்னர்ச் சொல்லின். இது கல்வியின் விழுப்பம் கற்றார்க்கல்லது பிறர்க்கு அறிதலரிதென்றது.

பரிமேலழகர் உரை:
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
குற்றமறச் செயல்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும்.

மு. கருணாநிதி உரை:
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

Translation:
The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.

Explanation:
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

குறள் 718:

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

மணக்குடவர் உரை:
யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.

பரிமேலழகர் உரை:
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். (தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

மு. கருணாநிதி உரை:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

Translation:
To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!.

Explanation:
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

குறள் 719:

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

மணக்குடவர் உரை:
புல்லியவரிருந்த அவையின்கண் மறந்துஞ் சொல்லா தொழிக: நல்லவரிருந்த அவையின்கண் நல்லதனை இசையச் சொல்லவல்லார்.

பரிமேலழகர் உரை:
நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்லுதற்குரியார்; புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அவையறியாத புல்லர் இருந்த அவைக்கண் அவற்றை மறந்தும் சொல்லாதொழிக. (சொல்லின், தம் அவையறியாமையை நோக்கி நல்லவையும், பொருளறியாமையால் புல்லவைதானும் இகழ்தலின், இரண்டு அவைக்கும் ஆகார் என்பது கருதிப் 'பொச்சாந்தும் சொல்லற்க' என்றார்.).

மு. வரதராசன் உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது.

மு. கருணாநிதி உரை:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

சாலமன் பாப்பையா உரை:
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

Translation:
In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.

Explanation:
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

குறள் 720:

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

மணக்குடவர் உரை:
அங்கணத்தின்கண் உக்க அமுதம் போல இகழப்படுவர்; தம்முடைய இனத்தாரல்லாதார் முன்னர் ஒன்றைச் சொல்லுவாராயின். கல்வியுடையார் புல்லவையுள் சொன்னால் உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்கு இஃது இகழப்படுவரென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; அங்கணத்துள் உக்க அமிழ்தற்று - சொல்லின், அது தூயதல்லாத முற்றத்தின்கண் உக்க அமிழ்தினை ஒக்கும். ('கொள்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல்விகுதியோடு கூடி 'மகன் எனல்' (குறள் 196) என்பது போல் நின்றது. 'சொல்லின்', 'அது' என்பன அவாய் நிலையான் வந்தன. பிறரெல்லாம் 'கொளல்' என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைத்தார், அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருள் உவமையோடு இயையாமை நோக்கிற்றிலர். சாவா மருந்தாதல் அறிந்து நுகர்வார் கையினும் படாது அவ்வங்கணத்துக்கும் இயைபு இன்றிக் கெட்டவாறு தோன்ற 'உக்க அமிழ்து' என்றார். அச்சொல் பயனில் சொல்லாம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தாழ்ந்தார் அவைக்கண் ஒரு வழியும் சொல்லற்க என்பது கூறப்பட்டது.

மு. வரதராசன் உரை:
தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

மு. கருணாநிதி உரை:
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

Translation:
Ambrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd.

Explanation:
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

குறிப்பறிதல்

பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: குறிப்பறிதல்.

குறள் 701:

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

மணக்குடவர் உரை:
அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவான். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.

பரிமேலழகர் உரை:
குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம். (ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.).

மு. வரதராசன் உரை:
ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.

மு. கருணாநிதி உரை:
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.

Translation:
Who knows the sign, and reads unuttered thought, the gem is he,
Of earth round traversed by the changeless sea.

Explanation:
The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

குறள் 702:

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

மணக்குடவர் உரை:
பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க.

பரிமேலழகர் உரை:
அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை; தெய்வத்தொடு ஒப்பக்கொளல் - மகனேயாயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க. (உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.).

மு. வரதராசன் உரை:
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

Translation:
Undoubting, who the minds of men can scan,
As deity regard that gifted man.

Explanation:
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).

குறள் 703:

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

மணக்குடவர் உரை:
ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக் குறிப்பையறிய மாட்டாவாயின் தன்னுறுப்புகளுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ? இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.

பரிமேலழகர் உரை:
குறிப்பின் குறிப்பு உணர்வாரை - தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் - அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க. (உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று, உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக்குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Translation:
Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.

Explanation:
The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.

குறள் 704:

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

மணக்குடவர் உரை:
நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார். இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.

பரிமேலழகர் உரை:
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு - அறிவான் வேறு. ('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.).

மு. வரதராசன் உரை:
ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.

மு. கருணாநிதி உரை:
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

Translation:
Who reads what's shown by signs, though words unspoken be,
In form may seem as other men, in function nobler far is he.

Explanation:
Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).

குறள் 705:

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

மணக்குடவர் உரை:
முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை, உறுப்பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க. உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.

பரிமேலழகர் உரை:
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன? (முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்?

மு. கருணாநிதி உரை:
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?

Translation:
By sign who knows not sings to comprehend, what gain,
'Mid all his members, from his eyes does he obtain?

Explanation:
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?

குறள் 706:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

மணக்குடவர் உரை:
தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும். இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.).

மு. வரதராசன் உரை:
தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல். ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

மு. கருணாநிதி உரை:
கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

Translation:
As forms around in crystal mirrored clear we find,
The face will show what's throbbing in the mind.

Explanation:
As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

குறள் 707:

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

மணக்குடவர் உரை:
முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.

பரிமேலழகர் உரை:
உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.).

மு. வரதராசன் உரை:
ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்டாலும், அவனுடைய முகம் முற்பட்டு அதைத் தெரிவிக்கும்; அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?

மு. கருணாநிதி உரை:
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?

Translation:
Than speaking countenance hath aught more prescient skill?
Rejoice or burn with rage, 'tis the first herald still!.

Explanation:
Is there anything so full of knowledge as the face ? (No.). it precedes the mind, whether (the latter is) pleased or vexed.

குறள் 708:

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

மணக்குடவர் உரை:
முகத்தை நோக்கி நிற்க அமையும்; தன் மனத்தை நோக்கி அறியலுற்றதனை அறியவல்லாரைப் பெறின். இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:
அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம்நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகம் நோக்கும் வகை தானும் அவர் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும். ('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து செல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவைமூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால்,(அவரிடம் எதையும் கூறாமல்) அவருடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

மு. கருணாநிதி உரை:
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.

சாலமன் பாப்பையா உரை:
தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

Translation:
To see the face is quite enough, in presence brought,
When men can look within and know the lurking thought.

Explanation:
If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.

குறள் 709:

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

மணக்குடவர் உரை:
ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின். இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.

பரிமேலழகர் உரை:
கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.).

மு. வரதராசன் உரை:
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால், (ஒருவனுடைய மனத்தில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லிவிடும்.

மு. கருணாநிதி உரை:
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

Translation:
The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye's swift varying moods to scan.

Explanation:
If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.

குறள் 710:

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

மணக்குடவர் உரை:
யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.

பரிமேலழகர் உரை:
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை -ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை. (அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது கண் என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது கருத்தாக்குவாரும்உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவருடைய கண்களே அல்லாமல் வேறு இல்லை.

மு. கருணாநிதி உரை:
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.

Translation:
The men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man's revealing eye.

Explanation:
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.

மன்னரைச் சேர்ந்தொழுதல்

பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல்.

குறள் 691:

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

மணக்குடவர் உரை:
மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.

பரிமேலழகர் உரை:
இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க. (கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.

Translation:
Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;
Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.

Explanation:
Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

குறள் 692:

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

மணக்குடவர் உரை:
எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்பாமை அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான். அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

மு. கருணாநிதி உரை:
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

Translation:
To those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies.

Explanation:
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

குறள் 693:

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

மணக்குடவர் உரை:
காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது. இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.

பரிமேலழகர் உரை:
போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல்  யாவர்க்கும் அரிது ஆகலான். (அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

மு. கருணாநிதி உரை:
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.

Translation:
Who would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare.

Explanation:
Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.

குறள் 694:

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

மணக்குடவர் உரை:
அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும். இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.

பரிமேலழகர் உரை:
ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.).

மு. வரதராசன் உரை:
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

Translation:
All whispered words and interchange of smiles repress,
In presence of the men who kingly power possess.

Explanation:
While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

குறள் 695:

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

மணக்குடவர் உரை:
யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.

பரிமேலழகர் உரை:
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.).

மு. வரதராசன் உரை:
(அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

Translation:
Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!.

Explanation:
(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).

குறள் 696:

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

மணக்குடவர் உரை:
அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க. இது சொல்லுந் திறம் கூறிற்று.

பரிமேலழகர் உரை:
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.).

மு. வரதராசன் உரை:
அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.

Translation:
Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.

Explanation:
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

குறள் 697:

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

மணக்குடவர் உரை:
எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக. சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.

பரிமேலழகர் உரை:
வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. ('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

Translation:
Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch's ears with pleasure heard.

Explanation:
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

குறள் 698:

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

மணக்குடவர் உரை:
இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.

பரிமேலழகர் உரை:
இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.).

மு. வரதராசன் உரை:
(அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.

Translation:
Say not, 'He's young, my kinsman,' despising thus your king;
But reverence the glory kingly state doth bring.

Explanation:
Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".

குறள் 699:

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

மணக்குடவர் உரை:
யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.).

மு. வரதராசன் உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

மு. கருணாநிதி உரை:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

Translation:
'We've gained his grace, boots nought what graceless acts we do',
So deem not sages who the changeless vision view.

Explanation:
Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".

குறள் 700:

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

மணக்குடவர் உரை:
யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.

பரிமேலழகர் உரை:
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும். (அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.

மு. கருணாநிதி உரை:
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

Translation:
Who think 'We're ancient friends' and do unseemly things;
To these familiarity sure ruin brings.

Explanation:
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.

தூது

பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: தூது.

குறள் 681:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

மணக்குடவர் உரை:
அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.

பரிமேலழகர் உரை:
அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.).

மு. வரதராசன் உரை:
அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

மு. கருணாநிதி உரை:
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

Translation:
Benevolence high birth, the courtesy kings love:-
These qualities the envoy of a king approve.

Explanation:
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.

குறள் 682:

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

மணக்குடவர் உரை:
அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.

பரிமேலழகர் உரை:
அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

மு. கருணாநிதி உரை:
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

சாலமன் பாப்பையா உரை:
அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

Translation:
Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.

Explanation:
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.

குறள் 683:

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

மணக்குடவர் உரை:
எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

பரிமேலழகர் உரை:
வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.).

மு. வரதராசன் உரை:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

மு. கருணாநிதி உரை:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

Translation:
Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.

Explanation:
To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).

குறள் 684:

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

மணக்குடவர் உரை:
அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு.

பரிமேலழகர் உரை:
அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.).

மு. வரதராசன் உரை:
இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

மு. கருணாநிதி உரை:
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

Translation:
Sense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy's task is fit.

Explanation:
He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

குறள் 685:

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

மணக்குடவர் உரை:
சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை:
தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.).

மு. வரதராசன் உரை:
பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

மு. கருணாநிதி உரை:
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

Translation:
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
An envoy he who gains advantage for his lord.

Explanation:
He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).

குறள் 686:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

மணக்குடவர் உரை:
தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்

பரிமேலழகர் உரை:
கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.).

மு. வரதராசன் உரை:
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

மு. கருணாநிதி உரை:
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

சாலமன் பாப்பையா உரை:
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

Translation:
An envoy meet is he, well-learned, of fearless eye
Who speaks right home, prepared for each emergency.

Explanation:
He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.

குறள் 687:

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.

மணக்குடவர் உரை:
காரியம் நின்ற முறைமையை யறிந்து காலத்தையும் நினைத்து இடமும் அறிந்து தானேயெண்ணிச் சொல்லவல்லவன் தலையான தூதனாவான். இது தலையான தூதரிலக்கணம் கூறிற்று.

பரிமேலழகர் உரை:
கடன் அறிந்து - வேற்றரசரிடத்துத் தான் செய்யும் முறைமை யறிந்து; காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து; இடன் அறிந்து - சென்ற கருமஞ் சொல்லுதற்கு ஏற்ற இடம் அறிந்து; எண்ணி - சொல்லுமாற்றை முன்னே விசாரித்து; உரைப்பான் தலை - அவ்வாறு சொல்லுவான் தூதரின் மிக்கான். (செய்யும் முறையாவது: அவர் நிலையும் தன் அரசன் நிலையும் தன் நிலையும் தூக்கி, அவற்றிற்கு ஏற்பக் காணும் முறைமையும் சொல்லும் முறைமையும் முதலாயின. செவ்வி - தன் சொல்லை ஏற்றுக் கொள்ளும் மன நிகழ்ச்சி. அது காலவயத்ததாகலின் காலம் என்றார். இடம்: தனக்குத் துணையாவார் உடனாய இடம். எண்ணுதல்: தான் அது சொல்லுமாறும், அதற்கு அவர் சொல்லும் உத்தரமும், அதற்குப்பின் தான் சொல்லுவனவுமாக இவ்வாற்றான் மேன்மேல் தானே கற்பித்தல். வடநூலார் இவ்விரு வகையாருடன் ஓலை கொடுத்து நிற்பாரையும் கூட்டித் தூதரைத் தலை, இடை, கடை, என்று வகுத்துக் கூறினாராகலின், அவர் மதமும் தோன்றத் 'தலை' என்றார். தூது என்பது அதிகாரத்தான் வந்தது. இவை ஐந்து பாட்டானும் தான் வகுத்துக் கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

மு. கருணாநிதி உரை:
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

சாலமன் பாப்பையா உரை:
தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

Translation:
He is the best who knows what's due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell.

Explanation:
He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.

குறள் 688:

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

மணக்குடவர் உரை:
தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்

பரிமேலழகர் உரை:
வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.).

மு. வரதராசன் உரை:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

மு. கருணாநிதி உரை:
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

Translation:
Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.

Explanation:
The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.

குறள் 689:

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.

மணக்குடவர் உரை:
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத அஞ்சாமையையுடைய தூதனாவான்.

பரிமேலழகர் உரை:
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

மு. கருணாநிதி உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

Translation:
His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.

Explanation:
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

குறள் 690:

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

மணக்குடவர் உரை:
தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது.

பரிமேலழகர் உரை:
இறுதி பயப்பினும் எஞ்சாது - அவ்வார்த்தை தன் உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன் அரசன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான். ('இறுதி பயப்பினும்' என்றதனால், ஏனைய பயத்தல் சொல்ல வேண்டாவாயிற்று. இவை மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

மு. கருணாநிதி உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

Translation:
Death to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king.

Explanation:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).

வினைசெயல்வகை

பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைசெயல்வகை.

குறள் 671:

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

மணக்குடவர் உரை:
சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. ('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.).

மு. வரதராசன் உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

மு. கருணாநிதி உரை:
ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

Translation:
The Resolve is counsel's end, If resolutions halt
In weak delays, still unfulfilled, 'tis grievous fault.

Explanation:
Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.

குறள் 672:

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

மணக்குடவர் உரை:
தாழ்த்துச் செய்ய வேண்டும் வினையைத் தாழ்த்துச் செய்க: தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க.

பரிமேலழகர் உரை:
தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக. (இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார்(குறள் 383), ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
காலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.

மு. கருணாநிதி உரை:
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

Translation:
Slumber when sleepy work's in hand: beware
Thou slumber not when action calls for sleepless care!.

Explanation:
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.

குறள் 673:

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

மணக்குடவர் உரை:
இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க. இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.

பரிமேலழகர் உரை:
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. (இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.).

மு. வரதராசன் உரை:
இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.

மு. கருணாநிதி உரை:
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.

Translation:
When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

குறள் 674:

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

மணக்குடவர் உரை:
வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.

பரிமேலழகர் உரை:
வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

மு. கருணாநிதி உரை:
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

Translation:
With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.

Explanation:
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

குறள் 675:

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

மணக்குடவர் உரை:
பொருளும், கருவியும், காலமும், வினையும் வினைசெய்யும் இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந்தீர எண்ணிப் பின்பு வினைசெயத் தொடங்குக. இவற்றுள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வகைப்படும்:-1. பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும், 2. கருவியாவது தனக்கு உள்ள படையும் மாற்றரசர்க்கு உள்ள படையும், 3. காலமாவது தனக்காங்காலமும் மாற்றரசர்க் காங்காலமும், 4. வினையாவது தான் செய்யும் வினையும் பகைவர் செய்யும் வினையும், 5. இடமாவது தனக்கா மிடமும் பகைவர்க்கா மிடமும் ஆம். இவை செய்யும் வினைக்கு முற்பட வேண்டுதலின் முற் கூறப்பட்டன.

பரிமேலழகர் உரை:
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

Translation:
Treasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o'er with care exact.

Explanation:
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.

குறள் 676:

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

மணக்குடவர் உரை:
வினை தொடங்கினால் அது முடியும் வண்ணமும் அதற்குவரும் இடையூறும் முடிந்தா லுண்டாகும் பெரும் பயனும் முன்பே கண்டு பின்பு வினைசெய்க.

பரிமேலழகர் உரை:
முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க. (முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

Translation:
Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done.

Explanation:
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).

குறள் 677:

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

மணக்குடவர் உரை:
செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.

பரிமேலழகர் உரை:
செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.

மு. கருணாநிதி உரை:
ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

Translation:
Who would succeed must thus begin: first let him ask
The thoughts of them who thoroughly know the task.

Explanation:
The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

குறள் 678:

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

மணக்குடவர் உரை:
ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும். இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை:
வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும். (பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

மு. கருணாநிதி உரை:
ஒரு செயலில் ஈ.டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

Translation:
By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.

Explanation:
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

குறள் 679:

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

மணக்குடவர் உரை:
தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும். இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொடல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல். (அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.).

மு. வரதராசன் உரை:
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்.

மு. கருணாநிதி உரை:
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

Translation:
Than kindly acts to friends more urgent thing to do,
Is making foes to cling as friends attached to you.

Explanation:
One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.

குறள் 680:

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

மணக்குடவர் உரை:
உறையும் இடம் சிறியார் தமது இடம் நடுங்குதற்கு அஞ்சித் தமது குறைதீரப் பெறின் தம்மின் பெரியாரைத் தாழ்ந்து நட்பாகக் கொள்வர். இது சிறையானால் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
உறை சிறியார் - ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி -தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார் - அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். (இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.

மு. கருணாநிதி உரை:
தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

Translation:
The men of lesser realm, fearing the people's inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head.

Explanation:
Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

வினைத்திட்பம்

பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்திட்பம்.

குறள் 661:

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

மணக்குடவர் உரை:
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.

பரிமேலழகர் உரை:
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.

மு. கருணாநிதி உரை:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

Translation:
What men call 'power in action' know for 'power of mind'
Externe to man all other aids you find.

Explanation:
Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

குறள் 662:

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

மணக்குடவர் உரை:
வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.

பரிமேலழகர் உரை:
ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்தில

மு. வரதராசன் உரை:
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

மு. கருணாநிதி உரை:
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை:
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

Translation:
'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'
These two define your way, so those that search out truth declare.

Explanation:
Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.

குறள் 663:

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

மணக்குடவர் உரை:
ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும். சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

மு. கருணாநிதி உரை:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

Translation:
Man's fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.

Explanation:
So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

குறள் 664:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

மணக்குடவர் உரை:
ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.

பரிமேலழகர் உரை:
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
'இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்' என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம் ; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.

மு. கருணாநிதி உரை:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

Translation:
Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.

Explanation:
To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

குறள் 665:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

மணக்குடவர் உரை:
மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.

பரிமேலழகர் உரை:
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

மு. கருணாநிதி உரை:
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

Translation:
The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state.

Explanation:
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

குறள் 666:

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

மணக்குடவர் உரை:
தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். ('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

மு. கருணாநிதி உரை:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

Translation:
Whate'er men think, ev'n as they think, may men obtain,
If those who think can steadfastness of will retain.

Explanation:
If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.

குறள் 667:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

மணக்குடவர் உரை:
யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.

பரிமேலழகர் உரை:
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.

மு. கருணாநிதி உரை:
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

Translation:
Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!.

Explanation:
Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

குறள் 668:

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

மணக்குடவர் உரை:
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை:
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.).

மு. வரதராசன் உரை:
மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

Translation:
What clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil.

Explanation:
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

குறள் 669:

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

மணக்குடவர் உரை:
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.

பரிமேலழகர் உரை:
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க. (துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்தபோதிலும் துணிவு மேற் கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

மு. கருணாநிதி உரை:
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

Translation:
Though toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yield at last.

Explanation:
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

குறள் 670:

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

மணக்குடவர் உரை:
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது

பரிமேலழகர் உரை:
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

மு. கருணாநிதி உரை:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

Translation:
The world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest.

Explanation:
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.